உங்களை கோடீஸ்வரர் ஆக்கும் 15:15:15 ஃபார்முலா!
ஒரு காலத்தில் ஒரு லட்சம் ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்தால், வங்கியின் மூத்த அதிகாரிகள்கூட வீட்டுக்கு வந்து நலம் விசாரித்து விட்டுப் போவார்கள். ஆனால், இன்று ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்தால்தான் அந்த மரியாதை நமக்கும் கிடைக்கும் என்கிற நிலை உருவாகிவிட்டது. எனவே, எல்லோரும் தங்களுடைய வாழ்க்கையில் ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி, அதாவது கோடீஸ்வரராக மாறுவது எப்படி என்பதை பற்றி விரிவாகவே பார்ப்போம்.
முதலில் ஒரு கோடி ரூபாய் என்கிற இலக்கை அடைய என்ன செய்ய வேண்டும்?
சேமிப்பு!
ஒரு கோடி ரூபாய் என்கிற இலக்கை அடைய வேண்டுமெனில், பணத்தைச் சேமிக்க வேண்டும் என்றுதான் நமக்குத் தெரியும். இது சரியான பதில்தான். ஆனால் எது உண்மையான சேமிப்பு...? உங்களுக்கு அடிப்படையான செலவுகள் போக மீதமுள்ள தொகைதான் உண்மையான சேமிப்பு. முதலில் சொன்ன சேமிப்புக்கும், இரண்டாவதாகச் சொன்ன உண்மையான சேமிப்புக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கிறீர்களா...?
உதாரணமாக, நான்கு பேர் உள்ள குடும்பத்தின் மாத வருமானம் ரூ.50,000 என்று வைத்துக்கொள்வோம். மாதச் செலவு ரூ.30,000 ஆகிறது. இரு சக்கர வாகனத்துக்கான ெட்ரோல் செலவு ரூ.2,500 ஆகிறது. இந்த 2,500 ரூபாய் செலவை 1,500 ரூபாயாகக் குறைத்து, மீதமுள்ள 1,000 ரூபாயைச் சேமிக்க முடிவு செய்கிறோம். ஆனால், இந்த சேமிப்பு அடுத்த சில மாதங்களுக்குக்கூட தொடர முடியாமல் போய்விடும். அதுதான் செலவின் வலிமை. அத்தியாவசியமான செலவைக் குறைக்கவே முடியாது. எனவே அத்தியாவசிய செலவு போக மீதமுள்ள தொகைதான் உண்மையான சேமிப்புத் தொகை. அதை கண்டிப்பாகச் சேமிக்க வேண்டும்.
எமர்ஜென்சி ஃபண்ட்!
சரி, சேமிக்கத் தொடங்கி விட்டோம். கையில் சில ஆயிரங்கள் சேர்ந்துவிட்டது. இந்த சமயத்தில் திடீரென ஒரு பெரிய செலவு வருகிறது. இதனால் ஏற்கெனவே சேமித்த பணமெல்லாம் கரைந்து போய்விடும் இல்லையா? இதற்குத்தான் முதலில் எமர்ஜென்சி ஃபண்டுக்கான பணத்தை நாம் சேர்த்து வைக்க வேண்டும். நம் வருமானத்தில் அடிப்படையான செலவுகள் போக 20,000 ரூபாய் இருக்கிறது எனில், அதில் 5,000 ரூபாய் எமர்ஜென்சி ஃபண்டாக எடுத்து வைத்துவிட வேண்டும். நம் சேமிப்பு இடையூறு இல்லாமல் தொடரவும், எதிர்பாராமல் வரும் நல்ல விஷயங்கள், விபத்துக்கள் போன்றவற்றுக்கு இந்த எமர்ஜென்சி ஃபண்டை பயன்படுத்திக் கொள்ளலாம். அதுதவிர, வேறு எதற்கும் இந்த பணத்தை பயன்படுத்தக்கூடாது,
இன்றைய தேதிக்கு உங்களிடம் 3 - 5 லட்சம் ரூபாய் வரை எமர்ஜென்சி ஃபண்டாக இருக்க வேண்டும். இதுவே 6 சதவிகித பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், 12 வருடத்துக்குப்பின் அதாவது 2027-ல் எமர்ஜென்சி ஃபண்ட் 6 - 10 லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும். ஆக, 12 வருடத்துக்கு ஒருமுறை 6 சதவிகித பணவீக்கத்தில் உங்கள் செலவுகள் இரண்டு மடங்காக அதிகரிக்கும். அதை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள். ஒருவேளை உங்கள் எமர்ஜென்சி ஃபண்ட் பணவீக்கத்தைக் கணக்கிட்ட பின்னும் கூடுதலாக இருந்தால், உங்கள் ஒரு கோடி ரூபாய் என்கிற லட்சிய சேமிப்பிலேயே தொடர்ந்து கவனம் செலுத்துங்கள்.
கூட்டு வட்டி!
எமர்ஜென்சி ஃபண்ட் போகப் பாக்கி உள்ள 15,000 ரூபாயை எத்தனை மாதங்களாகச் சேர்த்தால், 1 கோடி ரூபாய் வரும் என்று கணக்குப்போட்டுப் பாருங்கள். இதை உண்டியலில் போட்டு வந்தால், ஏறக்குறைய 56 வருடம் நீங்கள் சேமிக்க வேண்டும். அதைவிட குறைந்த காலத்தில் உங்கள் இலக்கை நீங்கள் அடைய வேண்டும் எனில், அதை சரியான வகையில் முதலீடு செய்ய வேண்டும்.
சரியான முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்வதால் என்ன பயன்?
பல பயன்கள் உண்டு. அதில் முக்கியமானது, கூட்டு வட்டி. நீங்கள் முதலீடு செய்யத் தொடங்கிய நாளிலிருந்து, ஒரு கோடி ரூபாய் என்கிற இலக்கை அடையும் அந்தப் பொன்னான நாள் வரை உங்கள் பணம், பணத்தை ஈட்டும். அதுதான் கூட்டு வட்டி. உதாரணமாக, ஒருவர் ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாயை, 10 சதவிகிதம் வருமானம் தரக்கூடிய முதலீட்டில் முதலீடு செய்கிறார் என்றால் 10 வருட முடிவில் அவருக்கு 20,48,450 ரூபாய் கிடைக்கும். இதையே அவர் முதலீடு செய்யாமல், வெறுமனே சேமித்து வைத்தால், 10 வருட முடிவில் வெறும் 12 லட்சம் ரூபாய்தான் கிடைக்கும். இப்போது புரிகிறதா கூட்டுவட்டியின் மகிமை?
எதில் முதலீடு?
சேமித்தால் மட்டும் போதாது. அதை முதலீடு செய்ய வேண்டும். அப்போதுதான் 1 கோடி ரூபாய் என்கிற இலக்கை நாம் அடைய முடியும். ஆனால், எதில் முதலீடு செய்வது, எவ்வளவு முதலீடு செய்வது, எத்தனை ஆண்டு காலத்துக்கு முதலீடு செய்வது?
இந்த கேள்விகளுக்கான சிதம்பர ரகசிய பதில்தான் 15 : 15 : 15 என்கிற சூப்பர் பார்முலா. அது என்ன 15 : 15 : 15..?
நீங்கள் சேமிக்க நினைக்கும் 15,000 ரூபாயை, எஸ்ஐபி முறையில் 15 வருடத்துக்குத் தொடர்ந்து முதலீடு செய்து, அதற்கு 15 சதவிகிதம் வருமானம் கிடைத்தால், உங்கள் கையில் 1,00,27,600 ரூபாய் கிடைக்கும். இந்த 1 கோடியில் நீங்கள் செய்த முதலீடு வெறும் 27 லட்சம் ரூபாய்தான். ஆனால், கூட்டுவட்டியின் மகிமையால் நான்கு மடங்கு பெருகி இருக்கிறது உங்கள் சேமிப்பு.
உங்கள் முதலீட்டைப் பணவீக்கத்தைவிடக் கூடுதலான வேகத்தில் பெருக்கித் தரும் வல்லமை பங்குச் சந்தைக்கு உண்டு. பங்குச் சந்தை முதலீட்டில் நல்ல அனுபவம் உள்ளவர்கள் நேரடியாகப் பங்குகளில் முதலீடு செய்து தங்கள் இலக்கை அடையலாம். பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய முடியாதவர்கள் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இதில் முக்கியமான விஷயம், இப்படி நீங்கள் சேர்க்கும் 1 கோடி ரூபாய்க்கு ஒரு ரூபாய்கூட வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.
நீங்களும் கோடீஸ்வரர் ஆக..!
இன்றைக்கு 30 வயதிலேயே பலரும் 50,000 ரூபாயை சம்பாதிக்கிறார்கள். இதிலிருந்து 15,000 ரூபாயை எப்பாடுபட்டாவது எடுத்து முதலீடு செய்தால், உங்களது 45-வது வயதில் நீங்களும் கோடீஸ்வரர் ஆகிவிடலாம். இப்படி நீங்கள் சேர்த்த 1 கோடி ரூபாயை 8 சதவிகிதம் நிலையான வருமானம் தரக்கூடிய லிக்விட் ஃபண்டுகளிலோ அல்லது கடன் சார்ந்த ஃபண்டுகளிலோ முதலீடு செய்தால்கூட ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
30 வயதில் மாதம் 50,000 ரூபாய் சம்பாதிக்கும் நீங்கள், 15 ஆண்டுகள் கழித்து தோராயமாக 75,000 ரூபாய் சம்பளம் வாங்குவீர்கள். 30 வயதில் செய்த 30,000 ரூபாய் செலவு 15 வருடம் கழித்து, அதாவது உங்கள் 45-வது வயதில் 72,000 ரூபாயாக அதிகரித்திருக்கும். உங்கள் சம்பளத்தை வைத்தே உங்கள் செலவுகளை செய்து சமாளித்துவிடலாம். ஆனால், நீங்கள் சேர்த்து வைத்த 1 கோடி ரூபாய் உங்களுக்கு சம்பாதித்துத் தரும் பணமோ ஆண்டுக்கு சுமார் ரூ.8,00,000. இந்த வருமானத்தை வைத்தே உங்கள் குழந்தைகளின் கல்லூரிப் படிப்பை கல்விக் கடன் வாங்காமலே முடித்துவிடலாம்.
ஆக, கோடீஸ்வரராகும் எண்ணம்கொண்ட அனைவரும் இந்தச் சுலபமான ஃபார்முலாவைப் பின்பற்றித் தங்கள் இலக்கை எளிதாக அடைந்துவிட முடியும். நீங்களும் கோடீஸ்வரர் ஆகும் முயற்சியை இன்றே தொடங்கலாமே!