இன்ஷுரன்ஸ் பாலிசி... தவிர்க்க வேண்டிய தவறுகள்!

இன்ஷுரன்ஸ் பாலிசி... தவிர்க்க வேண்டிய தவறுகள்!


நம்மில் பெரும்பாலானவர்கள் லைஃப் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் தவிர்த்துவருவது ஒருபுறம் இருக்க, ஏற்கெனவே எடுத்திருப்பவர்கள் தங்கள் எதிர்கால பாதுகாப்புக்கு எந்த வகையிலும் உறுதி செய்யாத ஏதேதோ பாலிசிகளை எடுத்து வைத்திருக்கிறார்கள். இதற்குக் காரணம், இன்ஷூரன்ஸ் குறித்து தெளிவான புரிதல் இல்லாததால் செய்யும் தவறுகளால்தான். இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது நாம் செய்யும் தவறுகளையும், அதற்கான தீர்வுகளையும் பார்ப்போம்.

வரிச் சலுகை!

நம்மில் பலர் வரிச் சலுகைக்காக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறோம். ஆனால், இன்ஷூரன்ஸ் என்பது எதிர்கால பாதுகாப்புக்குத்தானே தவிர, வரிச் சலுகை கிடைக்கும் என்பதற்காக அல்ல. இந்த மனநிலையை மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

மற்றவர்களின் ஆலோசனை!

பல சமயங்களில் நமக்கு தேவையான இன்ஷூரன்ஸ் பாலிசியை நாமே முடிவு செய்து எடுக்காமல், மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு எடுக்கிறோம். இப்படி சொல்கிறவர்கள் நிதி ஆலோசகர்களாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், இன்ஷூரன்ஸ் பற்றி எதுவுமே தெரியாத நண்பர்கள், உறவினர்கள் சொல்வதைக் கேட்டு பாலிசி எடுப்பது மிகவும் தவறு.

குறைந்த பிரீமியம்!

குறைந்த பிரீமியத்தில் கிடைக்கிறது என்பதற்காக எந்த இன்ஷூரன்ஸ் பாலிசியையும் எடுக்கத் தேவையில்லை. தேவை இருந்து, நல்ல பலன்களுடன் குறைந்த பிரீமியத்தில் பாலிசி கிடைத் தால், அதைத் தாராளமாக வாங்கலாம்.

தெரிந்துகொண்டு கையெழுத்திடுங்கள்!

பாலிசி எடுக்கும்போது படிவத்தை நாமே நிரப்பாமல் கையெழுத்து மட்டும் போட்டுத்தருவது. இதனால் தான் அந்த பாலிசி குறித்த எல்லா விவரங்களும் பாலிசிதாரருக்குத் தெரியாமல் போகிறது. அதேபோல, காப்பீட்டுப் பத்திரத்தில், சுயதகவல்கள், வாரிசுதாரர் மற்றும் விதிமுறைகளைச் சரிபார்த்து அதன்பிறகு கையெழுத்துப் போடுவதே நல்லது.

குறைந்த காப்பீடு; அதிக பிரீமியம்!

நம்மில் பலர் குறைந்த காப்பீட்டுக்கு அதிக பிரீமியத்தைக் கட்டுவது மாதிரி யான பாலிசியை வைத்திருக்கிறார்கள். காரணம், பாலிசி எடுக்கும்போது இந்த பாலிசியின் மூலம் எவ்வளவு இழப்பீடு கிடைக்கும், அதற்கான விதிமுறைகளும் நிபந்தனைகளும் என்னென்ன என்பதைத் தெரிந்துகொள்ளத் தவறி விடுகிறோம். குறைந்த பிரீமியத்தில், அதிக காப்பீடு தரும் டேர்ம் பாலிசி களைத் தேர்வு செய்வதே சரி.

முக்கிய தகவல்களை மறைப்பது!

இன்ஷூரன்ஸ் படிவத்தை நாமே பூர்த்தி செய்தாலும், முக்கியத் தகவல்கள், நோய்கள், முந்தைய மருத்துவ வரலாறு, வேறு காப்பீடுகள் பற்றிய தகவல்களைத் தெரிவிக்காமல் விட்டுவிடுகிறோம் அல்லது மறைத்து விடுகிறோம். இது தவறு. நம்மை பற்றிய எந்த முக்கிய தகவலையும் நாம் மறைக்கவே கூடாது.

முக்கிய மாற்றங்கள்!

முகவரி மாற்றம், வாரிசுதாரர் மாற்றம், தொடர்புகொள்ளும் தகவல் மாற்றம் நிகழும்போது அதை உடனே காப்பீட்டு நிறுவனத்துக்குத் தெரியப் படுத்த வேண்டும். ஆனால், இதைச் செய்யாமல் விட்டுவிடுகிறார்கள்.

இன்ஷூரன்ஸ் முதலீடு அல்ல!

சிலர் குழந்தைகள் பெயரில்   இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து, அவர்களின் கல்விச் செலவுக்கும், திருமணச் செலவுக்கும் பயன்படும் என்று நினைக்கிறார்கள். இந்த மனநிலை முற்றிலும் தவறானது. குழந்தையின் கல்வி, திருமணத் தேவை களுக்கு தனியாக முதலீடு செய்ய வேண்டுமே தவிர, இன்ஷூரன்ஸ் பாலிசி  எடுக்கக் கூடாது.  முதலீட்டை யும், இன்ஷூரன்ஸையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது.

ரைடர்கள் முக்கியம்!

முக்கிய இன்ஷூரன்ஸ் பாலிசி களுக்கு ரைடர் என்று சொல்லப்படுகிற துணை பாலிசிகள் இருக்கும். இந்தத் துணை பாலிசிகள் உருவாக்கப்பட்டதன் நோக்கமே, பாலிசிதாரருக்கு கூடுதல் பயன் தரவேண்டும் என்பதினால்தான். ஆனால், இதற்கு பிரீமியம் தனியாகச் செலுத்த வேண்டுமே என்று நினைத்து, பலரும் இந்தத் துணை பாலிசிகளை எடுக்காமல் விட்டுவிடுகிறார்கள். இது பெரிய தவறு. பிரீமியம் கொஞ்சம் அதிகமாகக் கட்டினாலும், இழப்பீடு அதிகம் கிடைப்பதை நாம் கவனிக்கத் தவறக்கூடாது.


எந்தெந்த நோய்களுக்கு கிடைக்கும்?

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துவிட்டால், எல்லாவிதமான நோய்களுக்கும் க்ளைம் கிடைக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். எல்லா நோய்களுக்கும் இதில் க்ளைம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. மெடிக்ளைம் பாலிசி எடுக்கும்போது அந்த பாலிசியில் எந்த நோய்களுக்கு எல்லாம் க்ளைம் கிடைக்கும், எந்தெந்த நோய்களுக்கு க்ளைம் கிடைக்காது என்பதையும் தெளிவாக கேட்டுத் தெரிந்துகொண்டால், பிற்பாடு ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம்.

மருத்துவமனை விவரங்களைக் கவனிக்க!

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, மருத்துவமனைப் பட்டியல் விவரம். இதைக் கவனிக்காமல் விடுவதால், அவசர நேரங்களில் அருகில் இருக்கும் மருத்துவமனைகளை விட்டுவிட்டு, எங்கோ இருக்கும் மருத்துவமனை களைத் தேர்வு செய்துவிடுவோம்.

அலுவலகத்தைச் சார்ந்திருக்க வேண்டாம்!

வேலை பார்க்கும் நிறுவனத்தில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தால், தனியாக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதைத் தவிர்த்துவிடுகிறார்கள். இது முற்றிலும் தவறு. எதிர்பாராமல் அந்த நிறுவனத்தில் இருந்து நீக்கப் பட்டாலோ அல்லது நாமாக விலகினாலோ இன்ஷூரன்ஸ் இல்லாத நிலை ஏற்படும். அந்தசமயத்தில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டால், அதற்கான செலவை நம் கையிலிருந்து கட்ட வேண்டிய நிலை ஏற்படும். இதைத் தவிர்ப்பதற்கு போதுமான கவரேஜ் உள்ள பாலிசிகளை  தனியாக  எடுத்துக்கொள்வது நலம்.

வேண்டும் காலந்தவறாமை!

சரியான நேரத்தில் பிரீமியம் செலுத்தாமல் விடுவதன் மூலம் சிலர் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை காலாவதியாக விட்டுவிடுகின்றனர். பிரீமியம் கட்டுவதில் காலந்தவறாமை மிக முக்கியம். சிலர் தாங்கள் எடுத்த இன்ஷூரன்ஸ் பாலிசிகள் பற்றி குடும்ப உறுப்பினர்களிடம் எதுவும் சொல்வ தில்லை. இதுவும் தவறு. எல்லா இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் குடும்ப உறுப்பினர்களிடம் அவசியம் எடுத்துச் சொல்ல வேண்டும். காப்பீட்டுப் பத்திரங்களைப் பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும்.

மேற்சொன்ன இந்தத் தவறுகளை தவிர்த்தால்தான், இன்ஷூரன்ஸ் மூலம் கிடைக்கும் முழுப் பலனையும் மக்கள் அனுபவிக்க முடியும்.